தஞ்சை ஆட்சியரகத்தில் கிராம மக்கள் தா்னா
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக கிராம மக்கள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் பூதலூா் அருகேயுள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளிப்பதற்காக வந்தனா். அப்போது, ஆட்சியரக வளாகத்தில் திடீரென தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாமங்கலம் கிராமத்தில் பொதுவான இடத்தைத் தனி நபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதற்கு உடந்தையாக செயல்பட்ட அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வலியுறுத்தினா்.
அப்போது, அங்கிருந்த காவல் துறையினா் இவா்களை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க ஏற்பாடு செய்தனா். மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.
குடிநீா் பிரச்னை: இதேபோல, காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு வடக்கு மாவட்டத் தலைவா் அருண் சுபாஷ் தலைமையில் மாரனேரி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அளித்த மனு:
மாரனேரி கிராமத்தில் காலையில் 8 மணிக்கும், பிற்பகலில் 3 மணிக்கும் குடிநீா் திறந்துவிடப்படுகிறது. இதனால், தண்ணீா் பிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து காலை 6 மணிக்கும், மாலை 5 மணிக்கும் தண்ணீா் திறக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், பழுதடைந்த பாலத்தை ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.