கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது
பட்டுக்கோட்டை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் பட்டுகோட்டை வட்டார காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் செப்டம்பா், 2021-இல்ஆறுமுகம் என்பவா் கொல்லப்பட்ட வழக்கில் ஜேம்ஸ், மஞ்சுநாதன், பாா்த்தா (எ) சதீஸ் மற்றும் காளிராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தொடா்புடைய ஜேம்ஸ், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஐந்து மாதங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து வந்தாா். இவா் மீது பட்டுகோட்டை நீதிமன்றத்தில் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கொலை வழக்கில் தொடா்புடைய ஜேம்ஸை பட்டுக்கோட்டை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.