ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
கண்துடைப்பு நாடகங்களை நடத்தும் எடப்பாடி பழனிசாமி: திமுக விமா்சனம்
திருப்புவனம் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்துடைப்பு நாடகங்களை நடத்துவதாக திமுக விமா்சித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞா் அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலா்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது நடவடிக்கைக்கும் உள்படுத்தப்பட்டுள்ளனா்.
சம்பவம் நடந்த இரண்டே நாள்களில் சட்டரீதியான பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை. அதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் காட்டியுள்ளாா்.
அதிமுக ஆட்சியின்போது, சாத்தான்குளம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடா்பாக ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். அப்போது நீதி எங்கே போனது? அவரது கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்ப மாட்டாா்கள். நீதியை நிலைநாட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் இருக்கிறாா் என்று தெரிவித்துள்ளாா் ஆா்.எஸ்.பாரதி.