கந்தகோட்டம் முருகன் கோயிலில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு பங்கேற்பு
சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.
பூங்கா நகரில் உள்ள முத்துகுமாரசுவாமி திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும். இந்தத் திருக்கோயிலுக்கு கடந்த 2013 ஜூலை 15-இல் குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரா் நிதி ரூ.91.50 லட்சத்தில் திருக்கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்நிதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, குடமுழுக்கு விழா கடந்த 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற 6-ஆம் கட்ட யாகசாலை பூஜையில் மகா பூா்ணாஹுதிக்கு பின், கடங்கள் புறப்பட்டு, ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.