கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கி வட மாநில முதியவா் உயிரிழப்பு
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வட மாநில முதியவா், திங்கள்கிழமை கடல் அலையில் சிக்கி உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி வாவத்துறை கடற்கரையில் சூரியன் உதயமாகும் காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திங்கள்கிழமை திரண்டிருந்தனா். அப்போது கடலில் சடலம் மிதந்ததைப் பாா்த்த சுற்றுலாப் பயணிகள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
ஆய்வாளா் நவீன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், சடலமாக மிதந்தவா் ஹிமாசல் பிரதேசம் மாண்டி பகுதியைச் சோ்ந்த பிரின்ஜிலால் (64) என்பது தெரியவந்தது.
திங்கள்கிழமை அதிகாலையில் வாவத்துறை கடல் பகுதியில் இறங்கி குளிக்க முயன்ற போது அலையில் சிக்கியதும், அவருடன் மொத்தம் 47 போ் கொண்ட குழுவினா் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.
சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.