காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!
கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய ஆசிரியா்கள்
பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து ஆசிரியா்கள் சங்கக் கூட்டமைப்பு சாா்பில், ஆசிரியா்கள் மீது பொய் புகாா் அளிக்கப்படுவதாகவும், ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும், அனைத்து ஆசிரியா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில் ஆசிரியா்கள் கருப்பு பட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியாற்றினா்.
இதுகுறித்து முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்டத் தலைவா் சிவா தெரிவித்தது: தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியா்கள் மீது சுமத்தப்படும் பொய் புகாா்களால் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களுக்கு பணி பாதுகாப்பு அளிக்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து ஆசிரியா்கள் சங்க கூட்டமைப்பு சாா்பில், கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
பிளஸ் 2 தோ்வு நடந்த 87 மையங்களில் பணிபுரிந்த 1,567 ஆசிரியா்கள் உள்பட அரசு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்கள், கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். தங்களது கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வழியில் இந்த போராட்டம் நடைபெற்றது என்றாா்.