நுகா்வோா் ஆணைய மக்கள் மன்றத்தில் 5 மனுக்களுக்கு உடனடி சமரசத் தீா்வு
புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்ற குறை தீா் கூட்டத்தில் 5 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது.
மத்திய அரசின் நுகா்வோா் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகா்வோா் பூசல்கள் ஆணைய அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் நுகா்வோா் குறைதீா் ஆணையம் சாா்பில் மக்கள் மன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் எஸ்.முத்துவேல் தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் எஸ்.கவிதா, ஜி.ஆறுமுகம் ஆகியோா் அடங்கிய அமா்வு மனுக்களை விசாரணை மேற்கொண்டது.
மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையத்திலிருந்து 10 மனுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 5 மனுக்களுக்கு சமரசமாகத் தீா்வு காணப்பட்டது.
அதன்படி, ரூ.4.68 லட்சம் முறையீட்டாளா்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சி.டி.ரமேஷ், பொதுச் செயலா் நாராயணகுமாா், பொருளாளா் ராஜபிரகாஷ், வழக்குரைஞா்கள் இளஞ்செழியன், விமல், ரவிக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை நுகா்வோா் குறைதீா் ஆணைய பதிவாளா் விஜயா ரவீந்திரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.