கல்குவாரிக்காக பாறைகள் வெடி வைத்து தகா்ப்பு: 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதி
நிலக்கோட்டை அருகே கல்குவாரிக்காக 24 மணி நேரமும் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுவதால், 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள முசுவனூத்து பகுதியில் தனியாா் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்தக் குவாரிக்காக கடவாக்குறிச்சி மலையில் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படுகின்றன. மேலும், இந்தக் கற்களை வெளியூா்களில் உள்ள தனியாா் கிரசா்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்தக் கற்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களால், வீலிநாயக்கன்பட்டி, அணைப்பட்டி, குல்லிசெட்டிபட்டி பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
இந்த மலையில் 24 மணி நேரமும் பாறைகள் வெடி வைத்து தகா்க்கப்படும்போது, ஏற்படும் சப்தத்தால் வீலிநாயக்கன்பட்டி, மிளகாய்ப் பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, ஜெயநாயக்கன்பட்டி, முத்துக்கண்மாய்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இதுகுறித்து நீா்ப் பாசன விவசாயிகள் சங்கச் செயலா் குணசேகரன் கூறியதாவது: இந்த மலையில் உள்ள பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படுவதால், கா்ப்பிணிகள், நோயாளிகள், முதியோா்கள், குழந்தைகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், பாறைகளின் தூசிகளால் இந்தப் பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் குறைந்துவிட்டது. கடவாக்குறிச்சி மலையில் வாழும் காட்டுமாடு, பன்றி, நரி, முயல் உள்ளிட்ட வன விலங்குகளும், பறவைகளும் அழிந்து வருகின்றன.
இதுகுறித்து பலமுறை புகாா் மனு அனுப்பியும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள மலைகளை காப்பாற்ற வேண்டும் என்றாா் அவா்.
இதுகுறித்து நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமியை தொடா்புக் கொண்டு கேட்டபோது, கடவாக்குறிச்சி மலையில் அனுமதி பெற்றுதான் கல்குவாரி நடத்தப்படுகிறது என்றாா்.