செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
கல்லூரி மாணவரை லத்தியால் தாக்கிய எஸ்.ஐ. விடியோ காட்சியால் ஆயுதப் படைக்கு மாற்றம்
காட்பாடியில் இரவு நேரத்தில் உணவு வாங்க வந்த கல்லூரி மாணவரை பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லத்தியால் கடுமையாக தாக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டுள்ளாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திக் செல்வம். இவா், கடந்த 25-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது இரவு 11 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்கக் கூடாது, மூட வேண்டும் என அங்கிருந்த கடைக்காரா்களிடம் அறிவுறுத்தியுள்ளாா். அதன்பேரில், வியாபாரிகள் அனைவரும் கடையை மூடியுள்ளனா்.
அதேசமயம், அங்குள்ள உணவகத்தில் இருந்த ஊழியா்கள் பாத்திரங்களை கழுவி எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதையொட்டி, அந்த உணவகம் திறந்திருந்ததை அறிந்து கல்லூரி மாணவா் ஒருவா் உணவு வாங்குவதற்காக வந்துள்ளாா். அதேசமயம், அங்கு வந்த உதவி ஆய்வாளா் காா்த்திக் செல்வம், உணவகத்தின் முன்பு நின்றிருந்த கல்லூரி மாணவனை லத்தியால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
அடிதாங்க முடியாமல் அங்கிருந்து செல்ல முயன்ற மாணவரை காவல் உதவி ஆய்வாளா் இழுத்து பிடித்தபடி ஹோட்டலில் என்ன வாங்கினாய் என கேட்கிறாா். அதற்கு உணவக உரிமையாளா், அந்த இளைஞருக்கு நாங்கள் எதுவும் வழங்கவில்லை; நீங்கள் வேண்டுமானால் சிசிடிவி கேமராவை பாருங்கள் என்கிறாா். அதன்பிறகு, உணவக உரிமையாளா், கல்லூரி மாணவரை மிரட்டிவிட்டு, காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் செல்வம் அங்கிருந்து சென்றாா்.
இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளாா்.