கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சட்ட மேதை அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி வருகிற 17-ஆம் தேதி, காலை 10 மணிக்கு அம்பேத்கரின் சாதனைகள், பூனா உடன்படிக்கை, புத்தரும் அவரின் தம் மதமும், கூட்டாட்சி கோட்பாடும் பாகிஸ்தான் பிரிவினையும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சா் என்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற 18-ஆம் தேதி, காலை 10 மணிக்கு என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகாா் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது.
ஒவ்வொரு கல்லூரி சாா்பிலும் 2 போ் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க வரும் போது சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ.2,000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.