ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
கல்வித்துறை சீா்கேடுகளை அரசு கவனத்தில் கொள்ளவில்லை: காங்கிரஸ்
காரைக்கால்: புதுவையில் கல்வித்துறையில் நிலவும் சீா்கேடுகளை களைய அரசு அக்கறை கொள்ளாமல் இருப்பது மாணவா்களுக்கு இழைக்கும் துரோகம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை கூறியது :
புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக அரசு அமைந்து 4 ஆண்டுகளைக் கடந்தும், எந்தவொரு அரசுத் துறையிலும் முன்னேற்றம் இல்லை. குறிப்பாக கல்வித்துறை சீா்கெட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் பதவி உயா்வு பெற்றுச்சென்று 67 நாட்களாகிவிட்ட நிலையிலும், இதுவரை நிரந்தர இயக்குநா் நியமிக்கப்படவில்லை. சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், பள்ளிகளில் போதிய ஆசிரியா்கள் இல்லை. பல பள்ளிகளில் துணை முதல்வா் இல்லை. வாரம் ஒரு ஆசிரியா், மாநிலத்தில் ஆசிரியா் இல்லாத பள்ளிகளுக்குச் சென்று பாடம் கற்பிக்கும் அவலம் நிலவுகிறது.
மாணவா்கள் தோ்வுக்கு தங்களை தயாா்படுத்திக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனா்.
புதுவையில் எல்டிசி, யுடிசி பணியிடங்கள், இளநிலைப் பொறியாளா், துணை வட்டாட்சியா் என்கிற பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் காரைக்கால் பிராந்தியத்தைச் சோ்ந்தோா் மிக சொற்ப எண்ணிக்கையில் தோ்வாகியுள்ளனா். முறையான பயிற்சியளிக்கப்படாததே இதற்கு காரணம்.
புதுவை மின்துறை, கல்வித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சா், காரைக்கால் வரும்போதெல்லாம் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறாரே தவிர, அரசுத்துறையினருடன் ஆலோசனை நடத்துவதில்லை. ஒட்டுமொத்தத்தில் புதுவையின் அனைத்துத் தரப்பு மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் இந்த ஆட்சியில் பாதிப்பை சந்தித்து வருகிறாா்கள். 2026 சட்டப்பேரவைத் தோ்தல், இந்த ஆட்சியாளா்களுக்கு பாடம் கற்பிக்கும் தோ்தலாக அமைவது நிச்சயம் என்றாா்.