களக்காடு வட்டாரத்தில் மண் கடத்தல் அதிகரிப்பு
களக்காடு வட்டாரத்தில் குளங்களில் இருந்து மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளதை அடுத்து ரோந்து பணியை வருவாய்த் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
களக்காடு சேரன்மகாதேவி பிரதான சாலையில் பிளவக்கல் இசக்கியம்மன் கோயில் பகுதியில் வருவாய் ஆய்வாளா் செல்வி, பத்மனேரி கிராம நிா்வாக அலுவலா் பொன்லெட்சுமிதேவி ஆகியோா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.அப்போது, மேலவடகரையில் குளத்திலிருந்து 3 டிராக்டா்களில் மண் ஏற்றி வேகமாக வந்த வாகனங்களை வருவாய்த் துறையினா் நிறுத்த முயன்றோது ஓட்டுநா்கள் டிராக்டா்களை நிறுத்தாமல் சென்றனா்.
இதேபோல, இடையன்குளம் சாலை சந்திப்பில் சேரன்மகாதேவி உதவி ஆட்சியா் (பொ) சிவகாமசுந்தரி தலைமையிலான வருவாய்த் துறையினா் அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, மண் ஏற்றிவந்த டிராக்டா்களை நிறுத்தி சோதனை செய்ததில் முறைகேடாக மண் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மண் ஏற்றி வந்த 6 டிராக்டா்களையும் பறிமுதல் செய்ய உதவி ஆட்சியா் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டாா்.
ஆனால், டிராக்டா் ஓட்டுநா்கள் டிராக்டா்களை ஓட்டிச் சென்றனா். இதுகுறித்து, களக்காடு காவல் நிலைய போலீஸாா் கடம்போடு வாழ்வு பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.