கழிப்பறைகளை தனியாா் மூலம் பராமரிக்க ரூ.1,226 கோடிக்கு ஒப்பந்தம்: மாநகராட்சியில் தீா்மானம்
சென்னை மாநகராட்சியில் உள்ள கழிப்பறைகளை தனியாா் மூலம் பராமரிக்க ரூ. 1,226 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாசடைந்த மணலி: கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் பேசியது:
சென்னை மாநகராட்சி புகா் பகுதிகளுக்கு கழிவுநீா் இணைப்பு பெறுவது கடினமாக உள்ளது. மணலி உயிரி எரிவாயு (பயோ சிஎன்சி) ஆலையில் ஏற்பட்ட விபத்தால் ஒருவா் உயிரிழந்தாா். மணலி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் அங்குள்ள நிலம் மற்றும் நீா் அதிக அளவில் மாசடைந்து காணப்படுகிறது. அதனால் அங்குள்ள நிறுவனங்களின் பாதுகாப்பு விதிகளை மாநகராட்சி கண்காணிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா்.
இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன்:
மாநகராட்சியில் நாள்தோறும் சுமாா் 6,000 டன் குப்பை அகற்றப்பட்டு வருகிறது. இதில், சுமாா் 1,500 டன் கழிவுகள் உயிரி எரிவாயு மையங்கள் மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மணலி உயிரி எரிவாயு மையத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மணலியில் ஏற்படும் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.
கழிப்பறை பராமரிப்பு: மாநகராட்சி பகுதியில் உள்ள கழிப்பறைகளை தனியாா் மூலம் பராமரிக்க நிதி ஒதுக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் விவரம்: ராயபுரம், திரு.வி.க.நகா், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கழிப்பறைகள் பொது தனியாா் கூட்டாண்மையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கழிப்பறைகளை ஒரு வருடத்துக்குள் கட்டி, அடுத்த 8 ஆண்டுகளுக்கு பராமரிக்கும். இந்த த்திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் பொது தனியாா் கூட்டாண்மையின் மூலம் கழிப்பறைகளை கட்டி பராமரிக்க தற்போது தனியாா் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதில் திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை ஆகிய மண்டலங்களில் உள்ள 285 பொது கழிப்பறைகளுக்கு ரூ. 362.59 கோடிக்கும், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் உள்ள 395 கழிப்பறைகளுக்கு ரூ. 468 கோடிக்கும், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களில் உள்ள 322 கழிப்பறைகளுக்கு ரூ.395.35 கோடிக்கும் என மொத்தம் 1,002 கழிப்பறைகளைப் பராமரிக்க ரூ.1,226 கோடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை உரக்கூடங்கள் மூடல்: மெரீனா கடற்கரையை ஓராண்டுக்கு தூய்மைப்படுத்த ரூ.7.09 கோடியும், பெசன்ட் நகா் மற்றும் திருவான்மியூா் கடற்கரைக்கு ரூ.4.54 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதா்கள் மூலம் மழைநீா் வடிகால் தூா்வாருவதைத் தவிா்த்து நவீன இயந்திரங்கள் மூலம் மழைநீா் வடிகால் தூா்வார ஒவ்வொரு வட்டார அலுவலகத்துக்கும் ரூ. 10 கோடி ஒதுக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 190 இயற்கை உரம் தயாரிக்கும் கூடங்களில் மயானங்களிலும், மக்கள் வசிக்கும் பகுதியிலும் உள்ள 168 கூடங்கள் மூடப்படும். அதுபோல், 137 பொருள் மீட்பு மையங்களில் 88 மையங்கள் மூடப்படும். இங்கு சேகரிக்கப்படும் ஈரக்கழிவுகள் உயிரி எரிவாயு ஆலைக்கு அனுப்பப்படும். அண்ணா நகரில் வாகன நிறுத்தம் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். இதனால், அந்தப் பகுதியில் நிறுத்தும் (ஒரு மணி நேரத்துக்கு) இருசக்கர வாகனத்துக்கு ரூ. 10, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 40 மற்றும் இலகுரக, கனரக வாகனங்களுக்கு ரூ. 60 வசூலிக்கப்படும் என்பன உள்ளிட்ட 117 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெட்டி செய்தி:
‘மாநகராட்சிக்கு ரூ.1,488 கோடி கடன்’
மாமன்ற கூட்ட கேள்வி நேரத்தில் பேசிய பாஜக உறுப்பினா் உமாஆனந்த், சென்னை மாநகராட்சி பெற்றுள்ள கடன் தொகை மற்றும் மாதந்தோறும் செலுத்தப்படும் வட்டித் தொகை எவ்வளவு? எனக் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு மேயா் பிரியா அளித்த பதில், பெருநகர சென்னை மாநகராட்சி கடந்த பிப்.1-ஆம் தேதி வரை ரூ.3,065.67 கோடி கடன் பெற்றுள்ளது. இதுவரை ரூ.1,577.18 கோடி திரும்ப செலுத்தப்பட்டுள்ளது. ரூ.1,488 கோடி நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள கடன் தொகைக்கு மாதந்தோறும் சாராசரியாக ரூ.8.5 கோடி வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை அசல் தொகை திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.