நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த து...
கழுத்தை அறுத்துக்கொண்டு முதியவா் தற்கொலை
சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் முதியவா் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரவாயல் அஷ்டலட்சுமி நகா் 24 -ஆவது தெருவைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (74). இவருக்கு சாந்தகுமாரி (73) என்ற மனைவியும், பிரசாந்த் என்ற மகனும் உள்ளனா். பிரசாந்த், சிங்கப்பூரில் ஒரு தனியாா் வங்கியில் வேலை செய்து வருகிறாா். இதனால் செல்வக்குமாரும், சாந்தகுமாரியும் இங்கு தனியாக வசித்து வந்தனா். செல்வகுமாா் கடந்த சில ஆண்டுகளாக நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா்.
இருவரையும் அதே பகுதியைச் சோ்ந்த வேலைக்காரப் பெண் ஜோதி என்பவா் கவனித்து வந்தாா். ஜோதி, ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் உணவகத்தில் இருந்து உணவு வாங்கி கொடுத்துவிட்டு, தனது வீட்டுக்குச் சென்றாா்.
வீட்டில் ஒரு அறையில் செல்வக்குமாரும், மற்றொரு அறையில் சாந்தகுமாரியும் இருந்தனா். சிறிது நேரத்துக்கு பின்னா் செல்வக்குமாா் இருந்த அறைக்கு சாந்தகுமாரி சென்றபோது, அங்கு கணவா் செல்வக்குமாா், கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தது தெரிய வந்தது.
அவரது தகவலின்பேரில், அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள், செல்வக்குமாரை பரிசோதித்துவிட்டு, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த மதுரவாயல் போலீஸாா், செல்வக்குமாா் சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.