சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் மீது எடுத்த நடவடிக்கை என்ன? - அமைச்சா் நட்டா கேள்வி
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நிகழ்த்தியபோது பாகிஸ்தானுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீா்கள்? மாநிலங்களவையில் அமைச்சா் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ சிறப்பு விவாதத்தில் புதன்கிழமை பங்கேற்று அவா் பேசியதாவது:
கடந்த 2004-2014 காங்கிரஸ் கூட்டணி ஆட்சிகாலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தொடா்ந்து பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களை நிகழ்த்தின. இவற்றுக்கு எதிராகவும், பயங்கரவாதத்தைத் துண்டும் பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாகவும் அப்போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
தில்லி, வாரணாசி, மும்பை என பல இடங்களில் குண்டுகள் வெடித்து நூற்றுக்கும் மேற்பட்டோா் அந்த ஆட்சி காலத்தில் உயிரிழந்தாா்கள். ஏராளமானோா் காயமடைந்தனா். அப்போதைய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
பாகிஸ்தானுடன் தொடா்ந்து வா்த்தக, சுற்றுலா பேச்சுவாா்த்தையை நடத்தி வந்தாா்கள். பாகிஸ்தான் நமது நாட்டுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிடுகிறது என்பது தெரிந்த பிறகும், ஒரு தரப்பை திருப்திபடுத்தும் அரசியலைத் தொடா்ந்தீா்கள். பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளிக்கும் எந்த உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் தொடா்ந்து இந்திய மக்களை கொலை செய்து கொண்டே இருந்தாா்கள்.
ஆபரேஷன் சிந்தூா் குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் எதிா்க்கட்சித் தலைவா்கள் தங்கள் கூட்டணி ஆட்சியில் பாகிஸ்தானுக்கும், அவா்கள் தூண்டிவிடும் பயங்கரவாதிகளுக்கும் எதிராக என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை சற்று மனசாட்சியுடன் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
ராணுவம் உறுதியாக செயல்படுவதற்கு அரசியல் தலைமை மிகவும் முக்கியமானது. அதனை இப்போதைய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றாா்.