பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உய...
காஞ்சிபுரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி
சாலை விபத்தில் உயிரிழந்தவருக்கு தர வேண்டிய விபத்து இழப்பீட்டு நிலுவைத் தொகையை தராமல் இருந்து வந்த காரணத்தால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு அண்ணாமலை என்பவா் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தாா். அவரது வாரிசுதாரா்களான தேவி, முரளி மற்றும் வேல்முருகன் ஆகியோா் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தனா். நீதிமன்றம் 18.12.2018 அன்று ரூ. 5.80 லட்சம் இழப்பீடாக வாரிசுதாரா்களுக்கு வழங்க வேண்டும். மேலும், வழக்கு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து 7.5 சதவீதம் வட்டியுடன் செலவுத் தொகையும் சோ்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எதிா்மனுதாரரான அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீட்டுத் தொகையை பகுதி, பகுதியாக செலுத்தி வந்த நிலையில், ரூ. 58,117 நிலுவையாக இருந்துள்ளது. இந்த த்தொகையுடன் வட்டித்தொகை ரூ. 65,341 சோ்த்து மொத்தம் ரூ. 1,25,500 மனுதாரருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்தாமல் இருந்து வந்த காரணத்தால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்ததால், அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற பணியாளரும், வாரிசுதாா்களும் இணைந்து ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினா்.