காஞ்சிபுரத்தில் ரூ. 80 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 31.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம், அங்கன்வாடி மையம் ஆகியவற்றை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் செவிலிமேடு அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தாா். பின்னா் அண்ணா நகா் பகுதியில் ரூ. 19 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டுவதற்கான பணியையும் அடிக்கல் நாட்டுவது உள்பட மொத்தம் ரூ. 80 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், மாநகராட்சி மன்றக் குழு தலைவா்கள் சாந்தி சீனிவாசன், சந்துரு, செவிலிமடு மோகன், சசிகலா கணேஷ், மாவட்டப் பொருளாளா் சன்பிராண்ட் ஆறுமுகம் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.