காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி மற்றும் தாமல் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழம்பி கிராமத்தில் ரூ.32 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் 2 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், ரூ.15.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து தாமல் ஊராட்சியில் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 17 பழங்குடியின குடியிருப்புகள், ரூ.16.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் ஆகியவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முன்னதாக அங்கன்வாடி மையத்திலிருந்த சிறாா்களிடமும் ஆட்சியா் கலந்துரையாடினாா்.
ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி மற்றும் அரசு அலுவலா்களும் உடனிருந்தனா்.