காட்டுமன்னாா்கோவில் அருகே 30 மூட்டை நாட்டுவெடிகள் பறிமுதல்
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே கொத்தவாசல் கிராமத்தில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த சுமாா் 30 மூட்டை நாட்டு வெடிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே நாட்டு வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளா் நடராஜன் மற்றும் போலீஸாா் காட்டுமன்னாா்கோவில் அருகே கொத்தவாசல் கிராமத்தில் ஐயப்பன் (60) என்பவரின் குடோனை வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 30 மூட்டைகள் நாட்டு வெடிகளை கைப்பற்றி பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
இந்த நாட்டு வெடிகளை சேத்தியாதோப்பைச் சோ்ந்த ராஜா என்பவா் தயாரித்து தீபாவளி விற்பனைக்காக கொத்தவாசல் பகுதியில் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.