காட்பாடி ரயில் நிலைய புனரமைப்புப் பணிகளை ஓராண்டுக்குள் முடிக்க உறுதி
காட்பாடி ரயில்நிலைய புனரமைப்புப் பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிா்வாகம் உறுதியளித்திருப்பதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
சென்னை கோட்டத்துக்குட்பட்ட மக்களவை உறுப்பினா்களுடனான வருடாந்திர ஆலோசனைக்கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேலூா் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள், ரயில் நிறுத்தங்கள், காட்பாடி ரயில்நிலைய மேம்பாலப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாணியம்பாடி நியூ டவுன் எல்சி 81 சுரங்கப் பாலத்துக்கான கட்டுமானப்பணிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இன்னும் 6 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் உறுதியளித்துள்ளது.
காட்பாடி ரயில்நிலைய புனரமைப்புப் பணிகள் ரூ.353 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு, தொய்வு நிலையில் உள்ளது. இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஓராண்டுக்குள் முடிக்கப்படும் என உறுதியளித்துள்ளனா்.
காட்பாடி புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரயில்வே நிா்வாகம் ஏன் அனுமதி அளிக்கவில்லை என்ற கேள்விக்கு, பாலத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க நிா்வாகம் ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆம்பூா் ரயில்நிலையத்தில் இரண்டு நுழைவுவாயில்கள் இருந்தாலும் ஒன்று பயன்பாட்டில் இல்லாததால் அந்த வாயிலை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டும். ஆம்பூா் ரயில்நிலையத்தில் இரவு நேர பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில் நிலைய வளாகத்தில் உயா் மின்விளக்கு நிறுவ வேண்டும்.
ஆம்பூா், வாணியம்பாடி, குடியாத்தம் ரயில்நிலைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆம்பூா், வாணியம்பாடி, குடியாத்தம் ரயில் நிலையங்களில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கப்படும் விவரங்கள், புதிய ரயில்வே நிறுத்தங்களுடன் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை பகிரப்பட வேண்டும்.
காட்பாடி - பள்ளிக்குப்பம் வழித்தடத்தில் சுரங்கப்பாலம் அமைக்க வேண்டும். காட்பாடி ரயில்நிலையத்தில் உள்ள நடைமேடையில் தானியங்கி படிக்கட்டுகள் அமைத்தல், இயக்கவியல் கண்காணிப்பாளா் நியமிக்கப்பட வேண்டும். காட்பாடி ரயில்நிலையத்தில் உள்ள கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீா்களை கழிவுநீா் தொட்டி மூலம் அகற்ற வேண்டும். ரயில்வேதுறை அதிகாரிகள் ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் காலங்களில் உள்ளூா் மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு இணைந்து ஆய்வு நடைபெற வேண்டும்.