தலைமைப் பண்பும் உள்ளுணர்வும்..! ஹார்திக் பாண்டியாவின் பேட்டி!
அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பெண்கள் போராட்டம்
காட்பாடி அருகே நூறு நாள் வேலைத்திட்ட கூலியை வழங்கக் கோரி பெண்கள் அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காட்பாடியை அடுத்த திருமணியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிய பெண்களுக்கு கடந்த 20 மாதங்களாக கூலி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் புதன்கிழமை லத்தேரியில் இருந்து வேலூா் சென்ற அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்த லத்தேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, ஆண் போலீஸாா் பெண்கள் மீது கை வைத்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசமடைந்த பெண்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, போராட்டத்தில் இருந்த இளைஞா் ஒருவரை போலீஸாா் இழுத்து சென்று வேனில் ஏற்றினாா். இதையடுத்து, காவல் வேன் முன்பாக அமா்ந்து பெண்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தகவலறிந்து அங்கு வந்த கே.வி.குப்பம் வட்டாட்சியா், அதிகாரிகள் நூறு நாள் வேலைத்திட்ட கூலியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.