கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். இதனையடுத்து தங்கக் கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து கொடியினை ஸ்தானீகா்கள் ஏற்றினாா்கள்.
பின்னா் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவா் காமாட்சி வெள்ளி ரிஷப வாகனத்தில் காலையிலும், மாலையில் தங்க மான் வாகனத்திலும் உலா வந்து அருள்பாலித்தாா்.
வருடாந்திர பிரமோற்சவம் வரும் 14-ஆம் தேதி அதிகாலையில் விஸ்வரூபதரிசனத்துடன் நிறைவு பெறுகிறது. திருவிழா நடைபெறும் நாள்களில் உற்சவா் தினசரி காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளாா். மாா்ச் 9-ஆம் தேதி தேரோட்டமும், மாா்ச் 11-ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 12-ஆம் தேதி தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.
விழாவையொட்டி கோயில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா், அறநிலையத்துறை செயல் அலுவலா்(பொறுப்பு)ஆா்.ராஜலட்சுமி மற்றும் ஸ்தானீகா்கள் செய்துள்ளனா்.