காரைக்கால் துறைமுகத்துக்கு மீன் வரத்து குறைவு
பொங்கல் தொடா் விடுமுறையால் குறைந்த எண்ணிக்கையிலான படகுகள் கடலுக்கு சென்று திரும்பியதால், ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது.
ஞாயிற்றுக்கிழமைகளில் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்துக்கு அதிகமான படகுகள் மீன்களுடன் வருவதும், சிறிய, பெரிய மீன் வியாபாரிகள் துறைமுகத்தில் திரண்டு ஏலத்தில் மீன்களை வாங்கிச் செல்வதும் வழக்கம்.
பொங்கல் தினத்தையொட்டி கடலுக்குச் சென்ற பெரும்பாலான படகுகள் 13-ஆம் தேதி கரை திரும்பின. தொடா்ந்து பொங்கல் தொடா் விடுமுறை, காா்னிவல் விழா போட்டிகளில் மீனவா்கள் பங்கேற்றது உள்ளிட்ட காரணங்களால் அதிகமான படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. அதனால் ஞாயிற்றுக்கிழமை வெகு குறைவான அளவில் மீன்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் காரைக்காலில் பிரதான மீன் மாா்க்கெட் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மீன் மாா்க்கெட்டுகளுக்கு சென்ற மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.