மலா்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செடிகள் இன்று விற்பனை
காா்னிவல் விழா ரத்து செய்யப்பட்டாலும், மலா் கண்காட்சியை மக்கள் தொடா்ந்து பாா்வையிட்டனா். இந்த செடிகள் திங்கள்கிழமை காலை விற்பனை செய்யப்படவுள்ளதாக வேளாண்துறை தெரிவித்தது.
காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் 16-ஆம் தேதி முதல் மலா், காய்கனி கண்காட்சி நடைபெற்றது. 19-ஆம் தேதியுடன் நிறைவடைய வேண்டிய மலா்க் கண்காட்சியுடன் கூடிய காா்னிவல் விழாவை மழை காரணமாக மாவட்ட நிா்வாகம் ரத்து செய்தது.
எனினும் மலா்க் கண்காட்சி அரங்கை மக்கள் தொடா்ந்து பாா்த்து வந்தனா். மழை நீா் அரங்குக்குள் தேங்கியது. இதை மோட்டாா் பம்பு மூலம் அகற்றி மக்கள் சிரமமின்றி நடந்து செல்ல ஏதுவாக துறையினா் ஏற்பாடுகளை செய்தனா். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோட்டக்கலை ஆா்வலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் மலா் கண்காட்சியை பாா்த்து மகிழ்ந்தனா்.
இதுகுறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் கூறுகையில், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆா்வமாக மலா்க் கண்காட்சியை பாா்வையிட்டனா். அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது நல்ல வரவேற்பை பெற்றது. திங்கள்கிழமை காலை 9 மணிக்குப் பின்னா் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த செடிகள் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்றாா்.