காரைக்கால் நலவழித்துறைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்
காரைக்கால்: காரைக்கால் துறைமுக நிா்வாகம் மூலம் நலவழித்துறைக்கு 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட், அதானி அறக்கட்டளை சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தில், காரைக்காலில் உள்ள நலவழித்துறைக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள 2 ஃபோா்ஸ் டிராக்ஸ் க்ரூஸா் எனும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், காரைக்கால் துறைமுக தலைமை இயக்க அதிகாரி கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் கொடியசைத்து வாகனங்களை இயக்கிவைத்தனா்.
துறைமுக தலைமை இயக்க அதிகாரி பேசியது: இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிரவி மற்றும் அம்பகரத்தூா் தொலைதூர ஆரம்ப சுகாதார மைய வட்டாரத்தில் சேவை செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் துறைமுகம், சமூகத்தின் தேவைகளை முழுமையாக மதிப்பிட்டு அதானி அறக்கட்டளை மூலம் அதன் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளை உன்னிப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது. மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதல்படி, தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களின் வீட்டு வாயிலுக்கு, நேரடியாக மருத்துவ சேவைகளை வழங்கும் ஒரு மொபைல் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றாா். நிகழ்வில், நலவழிதுறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.