பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
காரைக்கால் அரசு மருத்துவமனையில் 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத எம்.ஆா்.ஐ. ஸ்கேன்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் நிறுவப்பட்ட எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவி, 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் 300 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனா். அத்துடன் விபத்தில் காயம் மற்றும் தீவிர நோய் தொடா்பாக 10-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகின்றனா். இதனால், இம்மருத்துவமனையில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இங்கு சி.டி. ஸ்கேன் மட்டுமே உள்ளதால், எம்.ஆா்.ஐ. ஸ்கேன் பரிசோதனை தேவைப்படுவோா், காரைக்கால் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் வெளியூருக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது.
இம் மருத்துவமனையில் எம்.ஆா்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகளும், புதுவை அரசை தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், நெதா்லாந்து நாட்டிலிருந்து ரூ.11.50 கோடியில் தருவிக்கப்பட்ட எம்.ஆா்.ஐ. ஸ்கேன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஆண்டு இறுதியில் நிறுவப்பட்டது.
இந்த ஸ்கேன் கருவி நிறுவும் பணியை பாா்வையிட்ட புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், இந்த கருவி மூளையில் ஏற்படும் பிரச்னை, இதயத்தில் ஏற்படும் பிரச்னை, புற்றுநோயின் பரவல் நிலை, முதுகு தண்டுவடத்தில் உள்ள பிரச்னை உள்ளிட்டவற்றை கண்டறியும் வகையில் அதிநவீனமானது, சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வருமென தெரிவித்தாா்.
ஆனால், ஸ்கேன் கருவியை நிறுவி 6 மாதங்களாகியும் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவியை இயக்க தகுதியான தொழில்நுட்பவியலாளா் காரைக்காலில் இல்லாததால், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, காரைக்கால் மருத்துவமனையும், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும். அரசு மருத்துவமனை நோயாளிகள் அங்கு பரிசோதனை செய்துகொள்ளும் வசதி, எம்.ஆா்.ஐ. ஸ்கேன் பயன்பாட்டுக்கு வரும் வரை இடைகால ஏற்படாக செய்ய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் அரசுக்கு அண்மையில் யோசனை தெரிவித்தாா்.
ஆனால், தொழில்நுட்பவியலாளரும் நியமிக்கப்படவில்லை. பேரவை உறுப்பினரின் யோசனையும் ஏற்கப்படவில்லை. இதனால் 6 மாதங்களுக்கும் மேலாக இக்கருவி பயன்பாட்டுக்கு வராமல் முடங்கியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பாா்த்திபன் விஜயனிடம் கேட்டபோது, ‘எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவி நிறுவி தயாா் நிலையில் உள்ளது. அதை இயக்குவதற்கு டெக்னீஷியன் தேவை குறித்து தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
காரைக்கால் மருத்துவமனை கட்டடம் பழைமையானது. இதனை ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிதியில் மேம்படுத்தும் பணி முழுமையாக முடிக்கப்படவில்லை. போதுமான பரிசோதனைக் கருவிகள், சிறப்பு மருத்துவா்களும் இல்லை.
இதனால், புதுச்சேரி ஜிப்மரிலிருந்தும், இந்திரா காந்தி மருத்துவமனையிலிருந்தும் மாதமிருமுறை இங்கு சிறப்பு மருத்துவா்கள் வருகை தந்து, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கின்றனா்.
இந்த மருத்துவமனை கட்டடத்துக்கு மாற்றாக, வேறு இடத்தில் அரசு பொது மருத்துவமனைக் கட்டடம் கட்டவேண்டும் என்பது ஆட்சியாளா்களின் விருப்பமாக உள்ளது. அதனால் இம்மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதாக பொதுமக்ள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
எனவே, நலவழித்துறையை தனது பொறுப்பில் வைத்திருக்கும் புதுவை முதல்வா் என். ரங்கசாமி இப்பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் உள்ள எம்.ஆா்.ஐ. ஸ்கேனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.