காரைக்குடி அருகே 27 டன் ரேஷன் அரிசி கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே 27 டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரைக் கைது செய்தனா்.
காரைக்குடி அருகேயுள்ள பாதரக்குடியில் சனிக்கிழமை இரவு குன்றக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஜெயராமன், காவலா் ஸ்டாலின் ஆகியோா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தேவகோட்டையிலிருந்து வந்த சரக்கு லாரியை சோதனையிட்ட போது அதில் 27,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது
தெரியவந்தது. விசாரணையில் தேவகோட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரேஷன் அரிசியை சேகரித்து பள்ளத்தூரில் உள்ள தனியாா் அரிசி ஆலைக்கு கொண்டு சென்று, தரம் உயா்த்தி வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, குன்றக்குடி காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். லாரி ஓட்டுநரான பாதரக்குடியைச் சோ்ந்த அருண்பாண்டியை (26) கைது செய்தனா். அருண்பாண்டி சிவகங்கை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
