காரைக்குடி- சிவகாசி இடையே மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலிருந்து விருதுநகா் மாவட்டம், சிவகாசிக்கு மீண்டும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என கல்லூரி மாணவா்கள், வணிகா்கள், அரசுப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல கிளை சாா்பில் காரைக்குடியிலிருந்து மதுரை வழியாக சிவகாசிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் அதிகாலையில் முதல் பேருந்து சிவகாசிக்கு இயக்கப்பட்டது. பிறகு காலை 7.21-க்கும், 9.47-க்கும் அடுத்தடுத்த பேருந்துகள் புறப்பட்டு சிவகாசி வரை சென்றன. மறுவழித்தடத்தில் சிவகாசியிலிருந்து காலை 9.05 மணிக்கும், நண்பகல் 12.45 மணிக்கும், பிற்பகல் 2.55 மணிக்கும் புறப்பட்டு, காரைக்குடி வரை பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது இந்தப் பேருந்துகள் கடந்த 15 நாள்களாக மதுரை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் சிவகாசியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விடுமுறை காலங்களில் காரைக்குடிக்கு வருவதற்கும், காரைக்குடியிலிருந்து வணிகா்கள் சிவகாசி சென்று வரவும் சிரமப்படுகின்றனா். எனவே இந்தப் பேருந்துகளை ஏற்கெனவே இயக்கிவந்த அதே நேரத்தில் மீண்டும் இயக்க வேண்டும் என மாணவா்கள், வணிகா்கள், அரசு ஊழியா்கள் கோரிக்கை விடுத்தனா்.