கார் உற்பத்திக்கு இனி தூத்துக்குடி!
முத்துக்குப் பெயர் பெற்ற தூத்துக்குடி இனி கார் உற்பத்திக்கும் புகழ்பெறப் போகிறது. மின்சாரக் கார்கள்தான் எதிர்காலம் என்று முடிவு செய்து இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், 400 ஏக்கர் நிலப்பரப்பில் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட், தன் மின்சாரக் கார் தயாரிப்புத் தொழிற்சாலையை நிறுவியிருக்கிறது.
பெயருக்கு ஏற்ப, கடைக்கால் போட்ட 17 மாதங்களில் வின்ஃபாஸ்ட் வெகு `பாஸ்ட்டாக' தூத்துக்குடியில் உற்பத்தியைத் தொடங்குவது வியக்க வைக்கிறது. ஆரம்பத்தில் ஆண்டுக்கு 50,000 கார்கள் உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கும் வின்ஃபாஸ்ட், போகப் போக இந்த எண்ணிக்கையை ஒன்றரை லட்சமாக உயர்த்தத் திட்டம் தீட்டியிருக்கிறது.
இங்கே உற்பத்தியாக இருக்கும் VF 6 மற்றும் VF 7 கார்கள் தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாது, வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆக இருக்கிறது.
வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும் என்பதைப்போல இந்தத் தொழிற்சாலையின் வருகையால், உதிரிபாகங்கள் உற்பத்தி செய்து தரக்கூடிய மேலும் பல தொழிற்சாலைகள் இங்கு வர இருக்கின்றன.
ஏற்கெனவே ஓலா, ஆம்பியர், டிவிஎஸ் என்று மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஓசூர், ராணிப்பேட்டை, திருப்பெரும்புத்தூர் ஆகிய பகுதிகளில் ஆழமாகக் கால் பதித்து இருப்பதால், நாட்டில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 70% வாகனங்கள் தமிழ்நாட்டில்தான் உற்பத்தியாகின்றன.
இந்த வளர்ச்சியை ஓசூரைத் தாண்டி தூத்துக்குடியிலும் பரவச் செய்ய தமிழ்நாடு அரசு முயற்சிகள் எடுத்து வருவதால், தூத்துக்குடியின் துறைமுகம் ஆட்டோமொபைல் ஏற்றுமதி இறக்குமதிக்கு நுழைவு வாயிலாக மாறுவதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன.
இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் கையெழுத்தாகியிருக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தினால் விலை உயர்ந்த பென்ட்லி, ரோல்ஸ்ராய்ஸ், லேண்ட்ரோவர், ஆஸ்ட்டன் மார்ட்டின் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட கார்களின் விலை 90% அளவுக்கு வெகுவிரைவிலேயே குறைய இருக்கிறது. இந்த ஒப்பந்தம் மின்சாரக் கார்களுக்குப் பொருந்தாது என்பதும் தமிழ்நாட்டின் மின்சாரக் கார்கள் உற்பத்திக் கட்டமைப்புக்கு நல்ல செய்தியே!
- ஆசிரியர்