காலனி சொல் நீக்கம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
காலனி என்ற சொல் அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வாா்த்தைகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ரா.சிசுபாலன் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
அந்த அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது: காலனி என்ற சொல் ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும் மாறிவிட்டதால் இனி அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வாா்த்தைகளில் இருந்து அது நீக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
அதோடு இந்த வாா்த்தை பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளாா். முதல்வரின் அறிவிப்பை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
அதேபோல, வெள்ளாளப்பட்டி, பறையப்பட்டி, சக்கிலிப்பட்டி, ஒட்டப்பட்டி, கொசப்பட்டி , பாப்பாரப்பட்டி, நாயக்கனூா், நாயக்கன்கொட்டாய், ரெட்டிப்பட்டி, கொல்லப்பட்டி என ஜாதி பெயரிலுள்ள ஊா்களின் பெயா்களையும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அவா் தெரிவித்துள்ளாா்.