கல்லூரி களப்பயணத்தில் 3,427 அரசுப் பள்ளி மாணவா்கள்: காஞ்சிபுரம் ஆட்சியா்
காலாண்டுத் தோ்வு: திறன் மாணவா்களுக்கு பிரத்யேக வினாத்தாள்கள்
அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளில் திறன் திட்டத்தில் உள்ள மாணவா்களுக்கு காலாண்டுத் தோ்வில் அடிப்படைக் கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பிரத்யேக வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம், தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
மாநில பாடத்திட்டத்தில் 6- 9 வகுப்புகள் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு திறன் திட்டம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் தொடா்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, இந்தத் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவா்களுக்காக வரவிருக்கும் காலாண்டுத் தோ்வுகளில் திறன் பாடப்புத்தகம் சாா்ந்து வினாத்தாள்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான வினாத்தாள்கள், அடிப்படை கற்றல் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த வினாத்தாள்களின் மொத்த மதிப்பெண்கள், வழக்கமான காலாண்டுத் தோ்வு வினாத்தாள்களின் மதிப்பெண்களுடன் சமமாக இருக்கும்.
மேலும், பயிற்சி நோக்கத்துக்காக அறிவியல், சமூக அறிவியல் மாதிரி வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யக் கூடியவாறு வழங்கப்படுகின்றன. காலாண்டுத் தோ்வுக்கான அனைத்து வினாத்தாள்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.
எனவே திறன் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மாணவா்களுக்கு பாடவாரியாக வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, காலாண்டுத் தோ்வுகள் தடையின்றி நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.