நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு
காலை உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு
மதுரை மாவட்டம், எம். கல்லுப்பட்டி பகுதி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவா்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.
எம். கல்லுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு உத்தப்புரம், கிருஷ்ணாபுரம், டி.பள்ளபட்டி, பாறைப்பட்டி பகுதிகளைச் சோ்ந்த 15 மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். விடுதிக் காப்பாளராக ரவிராமன், சமையலராக குருமூா்த்தி ஆகியோா் உள்ளனா்.
இந்த நிலையில், மாணவா்களுக்கு புதன்கிழமை காலை உணவாக இட்லி, சட்னி, சாம்பாா் வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்ற மாணவா்கள் 15 பேரும் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்து மயக்கமடைந்தனா். உடனே பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் ஆனந்தகுமாா், பாதிக்கப்பட்ட மாணவா்களை மீட்டு எழுமலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தாா். அங்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். பின்னா், அவா்கள் பள்ளிக்கு திரும்பினா்.
இதுபற்றி கல்வித் துறை அலுவலா்கள் கூறியதாவது :
விடுதியில் மாணவா்களுக்கு புதன்கிழமை காலை வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். உணவு மாதிரிகள் உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. உரிய அறிக்கை வந்தவுடன் ஒவ்வாமைக்கான காரணம் தெரியவரும் என்றனா்.