காலை உணவுத் திட்டத்தை நடுநிலைப் பள்ளிகள் வரை செயல்படுத்தக் கோரிக்கை
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை நடுநிலைப் பள்ளிகள் வரை செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கராவிடம் மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
மே தினத்தையொட்டி, சத்தியமங்கலம் வட்டாரம், குன்றி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா்.
இதில், அனில் நத்தம் அரசமைப்பு உரிமை கல்வி மன்ற குழந்தைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
அதில், தமிழக அரசு தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறிப்பாக மலைக் கிராம குழந்தைகளுக்கு பேருதவியாக உள்ளது.
பள்ளி இடைநிற்றலைக் குறைக்கவும் வகை செய்துள்ளது. ஆகவே, இந்தத் திட்டத்தை நடுநிலைப் பள்ளிகள் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.