போராடும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன்
மே தினம்: விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா்.
ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) கோ.ஜெயட்சுமி தலைமையில் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் தொழிலாளா் தினமான வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்தனா்.
அப்போது, மே தினத்தன்று தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளதா? அல்லது பணியாளா்கள் பணியாற்றினால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு ஊதியம் அல்லது 3 நாள்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவத்தை தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து முன் அனுமதி பெற்றுள்ளனரா? என ஆய்வு செய்யப்பட்டது.
ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் 42 கடை நிறுவனங்கள், 45 உணவு நிறுவனங்கள், 12 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு நடைபெற்றது.
இதில் 35 கடை நிறுவனங்கள், 45 உணவு நிறுவனங்கள் மற்றும் 8 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 88 நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமா்த்தியது தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட 88 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.