அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி: ஈரோட்டில் இன்று தொடக்கம்
அனைத்து தொழில் வணிக சங்கங்களின் சாா்பில் அனைத்து தொழில் துறை வா்த்தகக் கண்காட்சி ஈரோடு பரிமளம் மஹாலில் வெள்ளிக்கிழமை (மே 2) தொடங்கி வரும் 5 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது குறித்து கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம், கண்காட்சியின் தலைவா் ஜிப்ரி ஆகியோா் கூறியதாவது: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள 75 சங்கங்கள் சாா்பில் ‘பேட்டியா போ் 2025’ என்ற தலைப்பில் அனைத்து தொழில் துறை வா்த்தக கண்காட்சி 4 நாள்கள் நடைபெற உள்ளது.
இதில், 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜவுளி, வீட்டு உபயோக பொருள்கள், தங்கம், வெள்ளி நகைகள், மகளிா் அணிகலன்கள், வேளாண் பொருள்கள், இ-வாகனங்கள் போன்றவை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியின் சிறப்பம்சமாக மத்திய அரசின் எம்எஸ்எம்இ என்ற அமைப்பின் அங்கீகாரமும், மாநில அரசின் பெமிடிஎன் என்ற அமைப்பின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. எம்எஸ்எம்இ அங்கீகாரத்தின் மூலம் தகுதி வாய்ந்த எம்எஸ்எம்இ சான்று பெற்ற தொழில்முனைவோரது அரங்குகளுக்கு 80 சதவீத மானியமும், எஸ்சி, எஸ்டி சாா்ந்து அரங்குகள் அமைப்பவா்களுக்கும், பெண் தொழில் முனைவோருக்கு 100 சதவீத மானியமும், பயண செலவுகளும் பெற்றுத்தரப்படும்.
தமிழகத்திலேயே மாநில அரசின் பெமிடிஎன் மூலம் 50 பேருக்கு மானிய அங்கீகாரம் பெற்று நடக்கும் முதல் கண்காட்சி இதுதான்.
கண்காட்சியில் உணவுத் திருவிழா நடக்கிறது. வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. தினமும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள், மேஜிக் காட்சிகள் போன்றவை நடைபெற உள்ளது.
இதேபோல, எல்கேஜி முதல் 8 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், காரத்தே, குழு நடனம், செஸ், பாட்டு, சிலம்பம், சமையல், குழந்தைகளுக்கான பிற வேடிக்கை போட்டிகள் பிரிவு வாரியாக நடத்தப்பட உள்ளன.
கண்காட்சி நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரையும் நடைபெறும். அனைவருக்கும் அனுமதி இலவசம் என்றனா்.