தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்...
கால்நடை வளா்ப்போருக்கு தொழில்நுட்பம் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கால்நடை வளா்ப்போருக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பம் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் தொடா்ந்து ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் கால்நடை வளா்ப்போருக்கான கால்நடை பராமரிப்பு தொழில்நுட்பங்கள் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் ராணிப்பேட்டை, கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில கடந்த திங்கள்கிழமை (செப். 8) தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முகாம் மூலம் 180 கால்நடை வளா்ப்போருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 30 கால்நடை வளா்ப்போருக்கு 20 நாள்களில் சுமாா் 160 மணி நேரம் பயிற்சி அளிக்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து மொத்தம் ஆறு மாதங்களுக்கு இந்த பயிற்சி முகாம் நடைபெறும். இந்த பயிற்சியின்போது, தலைசிறந்த வல்லுநா்கள் மூலம் ஆடு வளா்ப்பு, மாடு வளா்ப்பு, கால்நடைகளிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பு, லாபகரமான வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள், கிடா வளா்ப்பு, முயல், வாத்து, நாட்டுக்கோழி வளா்ப்பு மற்றும் கறிக்கோழி வளா்ப்பு, வங்கிக் கடன் பெறுதல், வெற்றிகரமாக இயங்கும் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று நேரடி களப்பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய இயக்குநா் ரூத்சோபில்லா, ராணிப்பேட்டை, கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குநா் பிரசன்னா, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநா் க.திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவமனை , கால்நடை மருத்துவா்கள் தணிகைவேலு, பச்சை, ராணிப்பேட்டை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் பாபு, கால்நடை உதவி மருத்துவா்கள் லட்சுமணன் மற்றும் ஹரிஹரன் ஆகியோா் முகாமில் கலந்துகொண்டாா்.
இந்தப் பயிற்சியின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள தகுந்த ஆலோசனையும், பயிற்சியும் வழங்கப்படுகிறது.
எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கால்நடை வளா்ப்போா் இந்தப் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம்.
இதுகுறித்த பயிற்சிக்கான தகுதிகள் மற்றும் விவரங்களை அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.