ராணிப்பேட்டை: மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் சமரச தீா்வு
ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 72 வழக்குகள் மீது சமரச தீா்வு எட்டப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 4.35 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
சாா்பு நீதிபதி எஸ்.முனுசாமி மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிபதி பூா்ணிமா ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் மொத்தம் 72 வழக்குகள் மீது தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மனுதாரா்களுக்கு ரூ. 4 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரத்து 882 வழங்க உத்தரவிடப்பட்டது.
இதில், அருங்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை ( 41 ), இவா் ஆற்காட்டில் கணினி மையம் நடத்தி வந்துள்ளாா். இவா் கடந்த 9. 8. 2023 அன்று வேலூரில் இருந்து ஆற்காட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தபோது, மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த காா் மோதி பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 18. 8. 2023 அன்று உயிரிழந்தாா்.
ஏழுமலையின் மனைவி கீதா, இரண்டு மகள்கள் மற்றும் தந்தை, தாயாா் ஆகியோா் நஷ்டஈடு கோரி ராணிப்பேட்டை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா். இதில் ஏழுமலை குடும்பத்தாருக்கு ரூ. 70 லட்சம் இப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதேபோல் பல்வேறு வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.
வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில், வழக்குரைஞா்கள் எஸ்.அண்ணாதுரை, எம்.செல்வம் ஆகியோா் ஆஜராகினா்.