ஸ்விசர்லாந்தில் இருக்கும் இந்த கிராமங்களில் குடியேறினால் ரூ. 50 லட்சம் வழங்கப்ப...
காவலாளி உடலில் 44 இடங்களில் காயம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனிப்படை போலீஸாரின் விசாரணையின் போது, உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் நகைகள் திருடு போனதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில், அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், தனிப்படையினா் தாக்கியதில் அஜித்குமாா் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டாா்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அஜித்குமாரின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, உடல் கூறாய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டது.
அதன் விவரம்: உயிரிழந்த அஜித்குமாரின் வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழும், வலது பக்க நெற்றியிலும், வலது பக்க கன்னத்திலும் சிராய்ப்பு காயம் இருந்தது. மேலும், இடது பக்க காதில் ரத்தம் உறைந்த நிலையிலும் வடிந்த நிலையிலும், இடது பக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை 44 இடங்களில் காயங்கள் இருந்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.