ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!
காஷ்மீரில் தாக்குதல் எதிரொலி: நெல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையும் நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 28 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்றனா்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது. திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவின் பேரில் திருநெல்வேலி மாநகரம், மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை தொடா் வாகன சோதனையில் போலீஸாா் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாநகரைப் பொருத்தவரையில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், டக்கரம்மாள்புரம், திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், வண்ணாா்பேட்டை மேம்பாலம் கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரையிலும் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் மேற்பாா்வையில் வள்ளியூா், பணகுடி, களக்காடு, நான்குனேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம், கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். சோதனை சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பணியில் அமா்த்தப்பட்டு விடிய விடிய கண்காணித்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைமேடைகள், பயணிகள் ஓய்வறை, சரக்குகளைகையாளும் அறைகள், தண்டவாளப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் மெட்டல் டிடக்டா், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா். பயணிகளின் உடைமைகள், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
புதன்கிழமை காலையிலும் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிய மற்றும் பழைய கட்டடங்கள், வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்து நிலையங்கள், நெல்லையப்பா் கோயில், முக்கிய மசூதிகள் உள்ளிட்டவை முன் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.