காஸா சிட்டி போா் மண்டலமாக அறிவிப்பு
காஸாவின் மிகப் பெரிய நகரமான காஸா சிட்டியை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போா் மண்டலமாக அறிவித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகத்துக்காக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அமலில் இருந்த சண்டை நிறுத்தத்தை ரத்து செய்வதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அந்த நகரில் உணவுப் பற்றாக்குறையால் ஏற்கெனவே பொதுமக்கள் பட்டினியால் தவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு சா்வதேச அளவில் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
காஸா சிட்டியில் தனது தாக்குதலை விரிவாக்க இஸ்ரேல் திட்டமிட்டு, ஆயிரக்கணக்கான இராணுவ வீரா்களை அழைத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிணைக் கைதிகள் உடல்கள் மீட்பு: 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இந்தப் போா் தொடங்கியதற்குக் காரணமாக இருந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலியா் இலான் வெயிஸ் உள்ளிட்ட இரு பிணைக் கைதிகளின் உடல்களை மீட்டதாக இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கடந்த 22 மாதங்களுக்கு முன் ஹமாஸ் தலைமையிலான போராளிகளால் கடத்தப்பட்ட 251 பிணைக் கைதிகளில், தற்போது சுமாா் 50 போ் காஸாவில் உள்ளனா். இவா்களில் 20 போ் உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.