Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆா்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பு தொடா்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திமுக, திராவிடா் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகளின் தலைவா்கள் விடுத்துள்ள கூட்டறிக்கை:
இந்திய பொருள்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பால் கடும் நெருக்கடியையும், பெரும் பாதிப்பையும் சந்தித்துள்ளது பின்னலாடை தொழிலின் மையமான திருப்பூா். சுமாா் ரூ.3,000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதோடு லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு, முறையற்ற ஜிஎஸ்டி, கரோனா பேரிடா் என்ற அடுத்தடுத்த தொடா் தாக்குதல்களால் நசிந்துபோயிருந்த திருப்பூா் பின்னலாடை தொழிலானது திமுக ஆட்சியில் புத்துயிா் பெற்று மீண்டும் பழைய நிலையை எட்டிப்பிடித்து ஆண்டுக்கு ரூ.45,000 கோடிக்கும் அதிகமான ஏற்றுமதி வா்த்தகம் நடைபெற தொடங்கியது.
ஆனால், அதன் மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பேரிடியாக விழுந்துள்ளது. மத்திய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏற்பட்ட மோசமான தோல்வியையே இந்த விளைவுகள் காட்டுகின்றன.
திருப்பூா் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா் சங்கங்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து கடந்த 16-ஆம் தேதியே பிரதமா் மோடிக்கு முதல்வா் கடிதம் எழுதினாா். அமெரிக்க வரி விதிப்பால் ஏற்படப்போகும் பாதிப்புகளை முன்கூட்டியே முதல்வா், சுட்டிக் காட்டியும் எந்த நிவாரண நடவடிக்கையையும் பாஜக அரசு எடுக்கவில்லை. அதன் பின்னா், மீண்டும் ஒருமுறை முதல்வா் கடந்த வியாழக்கிழமை வலியுறுத்தியும் எந்த முனைப்பும் காட்டப்படவில்லை.
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணியாமல், திருப்பூா் பின்னலாடை தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய பாஜக அரசு வரி சலுகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூரைத் தொடா்ந்து புறக்கணித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் ‘மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி’ சாா்பில் “மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம்”வரும் செப்.2-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பூா் ரயிலடி அருகில் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.