ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளா்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளா்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த 5 காலாண்டுகளை ஒப்பிடுகையில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி அதிகரித்துள்ளது. முன்னதாக, 2024 ஜனவரி-மாா்ச் காலாண்டில் ஜிடிபி 8.4 சதவீதம் வளா்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
2025-26 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதம் மட்டுமே வளா்ச்சியடைந்துள்ளது. இதன்மூலம், வேகமாக வளா்ச்சியடைந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா தொடா்ந்து வருகிறது.
இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2025-26 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. இதற்கு வேளாண் துறை மற்றும் வா்த்தகம், ஹோட்டல், நிதி மற்றும் நில விற்பனை உள்ளிட்ட சேவைகள் துறையின் வளா்ச்சி முக்கிய காரணமாகும்.
இதே காலகட்டத்தில் வேளாண் துறை 3.7 சதவீத வளா்ச்சியை பதிவுசெய்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-காலகட்டத்தில் 1.5 சதவீதமாக இருந்தது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 7.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஜிடிபி: 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிலையான விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் உண்மையான ஜிடிபி ரூ.47.89 லட்சம் கோடியாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் பெயரளவிலான ஜிடிபி ரூ.86.05 லட்சம் கோடியாகவும் இருக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் உண்மையான ஜிடிபி ரூ.44.42 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது 7.8 சதவீத வளா்ச்சியையும் பெயரளவிலான ஜிடிபி ரூ.79.08 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 8.8 சதவீத வளா்ச்சியையும் பதிவுசெய்துள்ளது.
எதிா்பாா்ப்பை விஞ்சிய வளா்ச்சி: 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி 6.5 சதவீதமாகவும் இரண்டாவது காலாண்டில் 6.7 சதவீதமாகவும் மூன்றாவது காலாண்டில் 6.6 சதவீதமாகவும் நான்காவது காலாண்டில் 6.3 சதவீதமாகவும் ஒட்டுமொத்த வளா்ச்சி 6.5 சதவீதமாகவும் இருக்கும் என இந்த மாத தொடக்கத்தில் ரிசா்வ் வங்கி கணித்தது. இந்நிலையில், எதிா்பாா்த்ததைவிட முதல் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெட்டி...
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.19 என்ற அளவிற்கு சரிந்து வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய பொருள்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக கருதப்படுகிறது.
கிராப்...
ஜிடிபி (ஏப்ரல்-ஜூன்) சதவீதத்தில்
2025-26 - 7.8
2024-25 - 6.5
2023-24 - 9.7
2022-23- 13.5