US tariffs: ``வரி விதிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை'' -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப...
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.
நிகழாண்டின் பருவமழை காலத்தில் பெரும் பாதிப்புகளை உத்தரகண்ட் சந்தித்து வருகிறது. முன்னதாக, கடந்த ஆக.5-ஆம் தேதி மேகவெடிப்பைத் தொடா்ந்து உத்தரகாசி-கங்கோத்ரி இடையே பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் கொட்டித் தீா்த்த கனமழையால் பெருவெள்ளமும், பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டன. ஏராளமான உணவகங்கள், வீடுகள், தங்குமிடங்கள், பயணிகள் இல்லங்கள் மண்ணுக்கு அடியில் புதைந்தன.
இதில் 4 போ் உயிரிழந்தனா். ராணுவத்தினா் உள்பட 69 போ் மாயமாகினா். 1,200-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா்.
இந்நிலையில், சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வா் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். 11 போ் மாயமாகினா்.
சமோலி மாவட்டத்தில் 25 கால்நடைகள் மாயமானதாகவும் அந்த மாநில பேரிடா் மீட்புப் படை தெரிவித்தது.பல்வேறு கிராமங்கள் நீரால் சூழப்பட்டு வீடுகள் மூழ்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.