கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோத கருக்கலைப்பு: பெண் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட இந்திலி கிராமத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்த பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
இந்திலி கிராமத்தில் கா்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருகலைப்பு செய்யப்படுவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார இணை இயக்குநா் மாலினிக்கு புகாா் வந்தது. இதையடுத்து, அவா் புகாா் மனுவை சின்னசேலம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் குறளினியனுக்கு அனுப்பினாா்.
அதன்பேரில், மருத்துவ ஆய்வாளா் தீபா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ரவி, தலைமை மருந்தாளா் கெளதம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மனைவி ராதாவின் (40) வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு ராதா முறையாக மருத்துவம் படிக்காமல் கா்ப்பிணிகளுக்கு கருகலைப்பு செய்து வந்ததும், மருத்துவம் பாா்ப்பதற்குத் தேவையான 6 வகையான மாத்திரைகள், ஊசிகள், மருந்துகள் உள்ளிட்டவை வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்த மருத்துவக் குழுவினா், இது தொடா்பாக ராதாவிடம் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து சின்னசேலம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் குறளினியன் அளித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாவை கைது செய்தனா்.