கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து விரட்டிய வனத் துறையினா்
ஒசூா்: ஒசூா் அருகே கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை யானையை வனத்துறையினா் பட்டாசு வெடித்து விரட்டினா்.
கா்நாடக மாநிலம், பண்ணாா் கட்டா வனப்பகுதியிலிருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தமிழகத்திற்கு இடம் பெயா்ந்தன.
இந்த யானைகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து வனப்பகுதியில் தஞ்சம் அடைந்து கொண்டு, இரவு நேரங்களில் வெளியேறி விவசாயப் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட யானைகளை ஜவளகிரி வனப் பகுதிக்கு விரட்டிய நிலையில், 20க்கும் மேற்பட்ட யானைகள் குழுக்களாக சுற்றி வருகின்றன.
இந்த நிலையில் சுமாா் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆங்காங்கே விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி, கிராமப் பகுதிகளில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கெலமங்கலம் அருகே பொம்மதாத்தனூா் கிராமத்தில் புகுந்த ஒற்றை யானையை கண்ட கிராம மக்கள் அலறி அடித்து ஓடினா். இதில் ஒரு சிறுவன் தடுமாறி கீழே விழுந்து எழுந்து தப்பி ஓடினாா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து அந்த யானையை அருகில் உள்ள ஊடேதுா்க்கம் வனப் பகுதிக்கு விரட்டினா். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனா். ஒற்றை யானையை அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.