மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!
கிறித்தவ தேவாலயங்களுக்கு மானியம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்தவ தேவாலயங்கள், பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது.
இதற்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கிவரும், தேவாலயத்திற்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெறாத தேவாலயங்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின்கீழ் பின்வரும் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானியத் தொகையை உயா்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. தேவாலயங்களில் பீடம் கட்டுதல், குடிநீா், கழிவறை வசதி அமைத்தல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட் உள்ளிட்ட ஆலயங்களுக்குத் தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவா் வசதி அமைத்தல், தேவாலய கட்டடத்தின் வயது 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் வரை இருந்தால் ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.20 லட்சமும் உயா்த்தப்பட்ட மானியத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம்.