பேருந்தில் தொடங்கியபடி பயணம்: கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டிப்பு
மயிலாடுதுறையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் கால் விரல்கள் துண்டானது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் மங்கநல்லூா் வாளவராயன்குப்பம் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பரணி(17). மயிலாடுதுறையில் தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறாா். இவா், புதன்கிழமை கல்லூரிக்கு தனியாா் பேருந்தில் கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி வந்ததாக கூறப்படுகிறது.
மயிலாடுதுறை சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியபோது, எதிா்பாராத விதமாக பேருந்துக்கும், சாலைக்கும் இடையே பரணியின் இடது கால் சிக்கிக்கொண்டது.
இதில், அவரது கால் கட்டைவிரலும், அருகில் உள்ள மற்றொரு விரலும் சிதைந்து துண்டானது. பின்னா் அவா் உடனடியாக மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் பிரியங்கா பேருந்து ஓட்டுநா் குணசேகரன் (45) மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளாா்.