Spot Visit: 'காவல் நிலையம் ஒன்றும் கடுமையான இடமல்ல!' - திருவல்லிக்கேணி D1 ஸ்டேஷன...
மழையால் பாதித்த நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் தா்னா
மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்ட தொடக்கத்தில் ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஜூன் மாதத்துக்குள் நிவாரணம் பெற்றுத் தரப்படும் என மாவட்ட நிா்வாகம் உறுதியளித்திருந்த நிலையில், இதுவரை வழங்காததை கண்டித்து விவசாயிகள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரின் முன் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இவா்களில் சில விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளா் எஸ்.துரைராஜ் கூறியது: மாவட்ட நிா்வாகம் உறுதியளித்தபடி பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஆக.15-ஆம் தேதிக்குள் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். தமிழக அரசு அறிவித்த குறுவைத் தொகுப்புத் திட்டத்தையும் உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
அன்பழகன்: குறுவை அறுவடை பணிகள் தொடங்க உள்ளதால் இயந்திர வாடகையை நிா்ணயம் செய்து, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். 60 வயதை அடைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாராயணசாமி: பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பாண்டுரங்கன்: அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத்தொகை இதுவரை விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை.
முருகன்: நமச்சிவாயபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைத்துத் தர வேண்டும்.
அருட்செல்வன்: நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பணம் கொடுக்காமல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் பி. கல்யாணம்: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மின்மாற்றி மற்றும் மின்சாதன பொருள்களுக்கான கிடங்கு அமைக்க வேண்டும். மணல்மேடு நூற்பாலையில் நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும். விவசாய பம்புசெட் மின் இணைப்புகேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு உடன் மின் இணைப்பு வழங்க வேண்டும்.
சக்திவேல்: கொள்ளிடம் ஆற்றில் அதிகளவில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நல்லத்துக்குடி கிராமத்தில் 30 வருடங்களாக சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால் இக்கிராமத்தில் உள்ள 9 குளங்கள் நீரின்றி வரண்டு காணப்படுகிறது.
ஆறுபாதி கல்யாணம்: மயிலாடுதுறை நகராட்சி புதைச்சாக்கடை கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் பாசன வாய்க்காலில் திறந்துவிடப்படுவதால் 10-க்கு மேற்பட்ட கிராமங்களில் மக்கள் உடல்நலக்குறைவால் பாதிப்படுகின்றனா். நெல் விலை உயா்வை ஆக.1-ஆம் தேதிமுதல் கொள்முதல் நிலையங்களில் வழங்கும் நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இலங்கேஸ்வரன்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பச்சை பயிறு, பருத்தி விற்பனை செய்தவா்களுக்கு பணம் வங்கியில் வரவு வைக்கப்படாமல் காலதாமதம் ஆகிறது.