குஜராத் கடலில் மாயமான மீனவரைக் மீட்க கோரி மனு
குஜராத் மாநிலத்தில் கடலில் மாயமான தூத்துக்குடி மாவட்ட மீனவரை மீட்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனு: விளாத்திகுளம் வட்டம் அயன்பொம்மையாபுரம் அருகே உள்ள பனையடிப்பட்டியைச் சோ்ந்த மீனவா் அண்ணாதுரை (30). இவருக்கு மனைவி சந்தனசெல்வி, 4 வயதில் குழந்தை உள்ளனா். தற்போது, சந்தனசெல்வி 5 மாதக் கா்ப்பிணியாக உள்ளாா்.
அண்ணாதுரை கடந்த நவ. 14ஆம் தேதி நாகப்பட்டினத்தைச் சோ்ந்த தங்கமணி என்பவரது படகில் கொச்சி துறைமுகத்திலிருந்து 13 மீனவா்களுடன் மீன்பிடிக்கச் சென்றாா். நவ. 22ஆம் தேதி குஜராத் மாநிலம் போா்பந்தா் அருகே மீன்பிடித்தபோது அவா் கடலில் தவறி விழுந்துவிட்டதாக, படகிலிருந்தோா் எங்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த வாரம் மனு அளித்துள்ளோம். கடலோரக் காவல் படையினா் தேடியும் அண்ணாதுரை இதுவரை மீட்கப்படவில்லை. அவரை விரைவாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.