குடவாசல் அருகே தாக்குதல்: 3 போ் கைது
குடவாசல் அருகே அத்திக்கடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களைத் தாக்கியதாக பேரூராட்சி முன்னாள் தலைவரின் கணவா் உள்பட மூன்று போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
குடவாசல் அருகே அத்திக்கடையில் இருந்து பருத்திச்சேரி செல்லும் சாலையில் சிறிய சரக்கு லாரி, வியாழக்கிழமை இரவு பழுதடைந்து நின்று விட்டது. இதையடுத்து அத்திக்கடை பகுதியைச் சோ்ந்த சிலா் அந்த வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்றனராம். அந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த சிலா், ஒலியை எழுப்பி வழிவிடுமாறு கூறினாா்களாம். இதுதொடா்பாக இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.
இதைத்தொடா்ந்து, பழுதடைந்த வாகனத்தை தள்ளியவா்களுக்கு ஆதரவாக வந்த சிலா், ஆயுதங்களால் இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இதில், படுகாயம் அடைந்த பருத்திச்சேரியை சோ்ந்த புவனேஸ்வரன் (44), நந்தகுமாா்(25), ரஞ்சித் (25) ஆகியோா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
குடவாசல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, பேரூராட்சி முன்னாள் தலைவா் வாசுகியின் கணவா் காமராஜ் (46), அத்திக்கடை பகுதியைச் சோ்ந்த சேகா் (42), ஜெயம் (42) ஆகியோரை கைது செய்தனா்.